Tuesday, March 28, 2017

ஆர். கே. நகர் இடைத்தேர்தல் தற்போதைய நிலவரம்- உள்ளூர்வாசியின் குரல்


 Paul Pown Raj and Thirumurugan Nandagopal
மார்ச் 28, 2017 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், ஆர். கே நகர் இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதிமுகவின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலா அறிவிக்கப்பட்டு, அவர் சட்டமன்ற அதிமுக தலைவராகவும் தேர்தெடுக்கப்பட்ட நிலையில், அன்றைய முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் (ஓ.பி.எஸ்) சசிகலா தலைமைக்கு எதிராக அணிவகுத்தார். உருட்டப்பட்ட அரசியல் பகடையில் ஓ.பி.எஸ் முதல்வர் பதவி இழந்தார்; சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார்; பின் TTV தினகரன் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார்; எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வர் ஆனார். இவை அனைத்தையும் தாண்டி கட்சிப் பெயர், இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை இழந்த நிலையில் தினகரன் வேட்பாளராக ஆர்.கே. நகரில் போட்டியிடுவது என பல்வேறு எதிர்பாராத திருப்பங்களை தமிழக அரசியல்
கண்டுள்ளது.

ஆர்.கே. நகர் தேர்தல் தமிழக அரசியலில்  இன்னும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று பலரும் நம்புகின்றனர். பொது ஊடகங்கள் மீதான நம்பிக்கை குறைந்து வரும் வேளையில், நானாகவே என்ன நிலவரம் ஆர்.கே. நகரில் என்று அறிய என் கல்லூரி நண்பரும் ஆர்.கே. நகர் தொகுதிவாசியுமான முருகன் நந்தகோபாலிடம் நடத்திய உரையாடலை உங்களோடு பகிர்கிறேன். 

கேள்வி:
வணக்கம் முருகன், உங்களைப் பத்தி சொல்லுங்கள், நீங்க என்ன பண்றீங்க? எவ்வளவு வருடங்களாக ஆர்.கே. நகர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் வாழ்ந்து வருகிறீர்கள்?

பதில்:
நான் பிறந்ததும் இங்கு தான், வாழ்வதும் இங்குதான். நான் முனைவர் பட்டம் (Ph.D) உயிர் தொழில் நுட்பவியல் (Biotechnology) பிரிவில் முடிக்கும் தருவாயில் உள்ளேன். எங்கள் வீட்டில் 13 ஓட்டுகள், உறவினர்களுக்கு 25 ஓட்டுகள் என மொத்தம் 38 ஓட்டுக்கள் இந்த ஆர்.கே. நகர் தொகுதியில் எங்கள் குடும்ப உறவினர்களுக்கு உள்ளன.

கேள்வி:
இந்த இரண்டு வருடங்களில் ஆர்.கே. நகர் சந்திக்கும் மூன்றாவது தேர்தல் இது, இதை எப்படி பார்க்கிறீர்கள்? தேர்தல் சூடு பிடித்துள்ளதா?

பதில்: 
2001 ல் தொடங்கி இன்று வரை இந்த தொகுதி அதிமுகவின் வசம் உள்ளது. மறைந்த எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே இந்தத் தொகுதி அதிமுக கோட்டையாக இருந்துள்ளது. ஆனால் இந்த தொகுதி ஒரு புறக்கணிக்கப்பட்ட தொகுதி. 2015 ல் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா MLAவாக ஆன பிறகு இது VIP தொகுதியாக மாறியது. ஊடகங்கள்  எங்கள் தொகுதியை கவனம் செலுத்த ஆரம்பித்ததே ஜெ. வருகைக்குப் பின்தான்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தேர்தல் வருவது உண்மையில் வருத்தமே. ஆனால் அது எங்களுக்கு ஒன்றும் கடினம் இல்லை, காரணம், யார் MLA வாக இருந்தாலும் எங்களுக்கு எதுவும் நடப்பதில்லை, அதனால் MLA இருந்தால் என்ன இல்லை என்றால் என்ன என்ற மனநிலையே. தேர்தல் வேலைகள் இப்போது தான் ஆரம்பித்துள்ளன. தற்போது வரை சில கட்சிகள் களத்தில் மும்மரமும், சில கட்சிகள்  நிதானமும் காட்டுகின்றன.

கேள்வி:
பணப்பட்டுவாடா ஆரம்பம் ஆகிவிட்டது என்றும்,  1000, 2000 இல்லை 10,000 ரூபாய் வரை விநியோகம் என்ற செய்திகள் வருகிறதே இது உண்மையா?

பதில்: 
இப்போது மட்டும் அல்ல கடந்த மூன்று தேர்தல்களிலும் இது போன்ற பேச்சுகள் அதிகம் இருந்தன. ஆனால் உண்மையில் அப்படி எதுவும் கொடுக்கப்படவில்லை.

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பின் ராயபுரம் தொகுதியின் சில பகுதிகளும் இணைக்கப்பட்டு பறந்து விரிந்த தொகுதியாக உள்ளது ஆர்.கே. நகர். புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளால் மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள், படிப்பறிவு குறைவான பாமர மக்கள் நிறைந்துள்ள தொகுதியாகவும், அவர்கள் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பதாகவும் அமைந்துள்ளது. இதனால் அடிப்படையாக சின்னம் பார்த்து வாக்களிப்பவர்கள் இங்கு அதிகம்.

தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தாலும் கொருக்குப்பேட்டை போன்ற சில பகுதிகளில் அதிகமாக நடக்கும். தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகள் போல 'பூத் சிலிப்' உடன் உள்ள எண்ணை குறித்து சென்று யாரெல்லாம் அந்தக் கட்சிக்கு வாக்களிப்பார்களோ அவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதுவும் 5000 ரூபாய் கொடுக்க கட்சித் தலைமைகள் முடிவு செய்தாலும் அது 1000, 2000 தான் வாக்காளர்களை வந்தடையும். அதுவும் குறிப்பிட்ட ஏரியாக்களில், ஓட்டுப் போடுவார்கள் என அறியப்பட்டவர்களுக்கு மட்டுமே. இன்னும் இந்த முறை பணப்பட்டுவாடா ஆரம்பமாகவில்லை.

கேள்வி:
முன்னாள் முதல்வர் மறைவிற்குப் பின் நடக்கும் இடைத்தேர்தல், இந்தத் தேர்தலில் மிக முக்கிய பிரச்சனைகளாக ஆர். கே. நகர் தொகுதி மக்கள் பார்ப்பது என்ன?

பதில்: 
ஆர்.கே. நகர் தொகுதி மக்களைப் பொறுத்தவரை எதிர்பார்ப்பு என்பது எப்போதுமே அதிகமாக இருந்ததில்லை. 2001ல் இருந்து அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் அதிமுக வென்றிருந்தாலும் 2015ல் ஜெ இங்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு வரை இந்தத் தொகுதி பெரிய மாற்றத்தைக் கண்டதில்லை. ஆனால் ஜெ இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின் ஒரு ஐ.டி.ஐ கல்லூரியும், ஒரு கலை அறிவியல் கல்லூரியும் நிறுவப்பட்டன. வ.உ.சி. நகர் ரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ள அரசுப் பள்ளி, கட்டிட வசதிகள் மேம்படுத்தப்பட்டு கல்லூரியாக தரம்  உயர்த்தப்பட்டுள்ளது. ஜெ வின் வரவிற்குப்பின் நிறைய சிற்றுந்துகள் தொகுதியின் மூலைமுடுக்கு எங்கும் வலம்  வருகின்றன. இது போன்ற பல வசதிகளும், மேம்பாடுகளும் ஜெவின் முதல்வர் தொகுதி என்பதால் ஏற்பட்டது என்று சொன்னால் மிகையாகது.


Chat Conversation End
தொகுதியின் நீண்ட கால பிரச்சனைகள் என்றால் கொருக்குப்பேட்டை ரயில் நிலையத்தின் அருகில் ரயில்வே லெவல் கிராஸிங்கில் மேர்பாஸ் மற்றும் வினோபா நகரை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.  ஐ.ஓ.சி பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை. மேலும், ஐ.ஓ.சி பேருந்து நிலையத்தில் இருந்து கோயம்பேடு போன்ற முக்கிய பகுதிகளுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லை.

கொடுங்கையூர் பகுதியில் நீண்ட நெடிய தூரத்திற்கு குப்பைக் கிடங்கு இருப்பதும், அதிலிருந்து எரிக்கப்படும் குப்பையின் புகையும் அந்த பகுதி மக்களுக்கு மிகப்பெரிய சுகாதாரக் கேடாக அமைந்துள்ளது.

ஒரு காலத்தில் சென்னையின் மையப் பகுதியான வண்ணாரப்பேட்டை ஏரியாவில் குறுகிய சாலைகளும், அதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களும் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. மகாராணியில் இருந்து பாண்டியன் தியேட்டர் வரும் சாலையை அகலப்படுத்துவதில் வணிக வளாகங்களால் உள்ள நடைமுறை சிக்கல்கள் களையப்பட வேண்டியது நீண்ட நாட்களாக சவாலாக உள்ளது.

தொகுதியில் அடிப்படையாக தண்ணீர் பிரச்சனை பிரதானம். சில ஏரியாக்களில் லாரிகளில் வரும் தண்ணீரையே நம்ப வேண்டிய நிலை. மேலும் மீனவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்குத் தீர்வு என களையப்படாத சிக்கல்களும், நிறைவேற்றப்படாத பணிகளும் நிறைய உள்ளன.

கேள்வி:
ஜெ மறைவிற்குப் பின் கட்சி சின்னத்தை இழந்த நிலையில் சசிகலா அணியில் தினகரன் தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறார்.  அதே நேரத்தில் பன்னீர் செல்வம் அணியில் மின் விளக்கு சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இவர்கள் இருவரின் வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது?

பதில்: 
ஜெ மரணத்தில் உள்ள மர்மங்களும், அது சம்பந்தமாக சசிகலா தரப்பு மீது உள்ள சந்தேகங்களும் வலுவாக தொகுதி மக்கள் மத்தியில் உள்ளது. தினகரனுக்கு கடும் எதிர்ப்பலை வீசுவதை உணர முடிகிறது. இருந்தாலும், தினகரன் அணி சார்பில் தேர்தல் வேலை மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஓட்டு சேகரிக்க ஊர்வலமாக செல்வது, கட்சியினர் கொண்டுவரும் மாலைகளை அணிவிப்பது, ஆரத்தி எடுப்பது போன்ற வேலைகளுக்கு தக்க சன்மானம் வழங்கப்படுகிறது. எனக்குத் தெரிந்த வட்டாரங்களில் இது போன்ற கட்சிப்பணி செய்யும் பலரும் கட்சி வெற்றியை விட பணத்தை எதிர்பார்த்தே இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். இவர்களுக்கு தினகரனுக்கு ஓட்டுப் போட விருப்பம் இல்லை என்றாலும் கொடுக்கப்படும் கையூட்டிற்கு இந்த சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. சில நேரங்களில் வலுக்கட்டாயமாக ஆரத்தி எடுக்கும், மாலை  போடும் சூழலும் இல்லாமல் இல்லை. இவ்வாறாக தினகரன் தரப்பு தொகுதியை வலம் வருகிறது.

தற்போதைய சூழலில் தினகரனுக்கு வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது. தினகரனுக்கு எதிராக உள்ளடி வேலைகளும் நடைபெறலாம். இருந்தாலும் எதையும் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. 2015 இடைத்தேர்தலில் மதியம் வரை 50% ஆக இருந்த வாக்குப்பதிவை 85% ஆக உயர்த்தும் அளவிற்கு அதிமுகவினர் 'கட்சிப்பணி' செய்தனர். இதனால்தான் சாதாரண வெற்றியைப் பெற வேண்டிய ஜெ, ஒரு இமாலய வெற்றியைப் பெற்றார். அதுபோல முறைகேடுகள் நடைபெறாது என்று யாராலும் சொல்ல முடியாது.

ஓ.பி.எஸ் அணியைப் பொறுத்தவரையில் மதுசூதனன் வண்ணாரப்பேட்டை வாசி, மண்ணின் மைந்தன். தொகுதியில் 40 வயதுக்கு மேற்பட்டோர் மத்தியில் நல்ல அறிமுகம் உள்ளது. ஆனாலும் அவரால் ஓட்டுக்கள் பிரியுமே தவிர வெற்றி பெறுவாரா என்று சொல்வது கடினம்.

கேள்வி:
இப்போதுள்ள நிலையில் அதிமுக ஓட்டுகள் தினகரன், பன்னீர் செல்வம் என  பிரிவதால் இது திமுகவிற்கு சாதகமாக அமையாதா?

பதில்: 
திமுக வேட்பாளர் மருதுகணேஷ் உள்ளூர் ஆள் தான்; சாமானியர்; வக்கீல். திமுகவிற்கான ஓட்டுகளும், அதிமுக எதிர்ப்பு ஓட்டுகளும் இவருக்கு சாதகம். திமுக 2016 தேர்தலில் சுமார் 57,000 ஓட்டுகளை வாங்கியது. இந்த முறை சராசரி அந்த ஓட்டுக்கள் விழும், மேலும் கூடுதல் ஒட்டுக்கள் வாங்க வாய்ப்புள்ளது. அது போக அதிமுக அணியின் ஓட்டுப் பிரிவது திமுகவிற்கு சாதகம் தான். ஆனால் அது வெற்றியை நோக்கி எடுத்துச் செல்லுமா என்று உறுதியாக கூறமுடியாது.

திமுக, சசிகலா அணி, பன்னீர் செல்வம் அணி மத்தியிலேயே கடும் போட்டி நிலவுகிறது. மற்ற இடைத்தேர்தல்கள் போல யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாக சொல்லிவிட முடியவில்லை. இதில் பணம் வெல்லுமா இல்லை மக்கள் வெல்வார்களா என்பதுதான் மிகப்பெரிய கேள்வி.

கேள்வி:
மற்ற கட்சியினரும் போட்டியிடுகின்றனர் அவர்களில் யாருக்கேனும் தொகுதியில் வரவேற்புள்ளதா? வெற்றி வாய்ப்பு உள்ளதா?

பதில்: 
திமுக, சசிகலா அணி, ஓ.பி.எஸ் அணி தவிர்த்து பாஜக மற்றும் நாம்தமிழர் கட்சி ஓரளவிற்கு வெளியே தெரிகின்றன.

ஜெ அண்ணன் மகள் தீபாவைப் பொறுத்தவரையில் ஜெவைப் போல தோற்றம் உள்ளதால் சில ஆயிரம் ஓட்டுக்கள் விழலாம். ஆனால் தீபாவிற்கு டெபாசிட் கிடைப்பதே சந்தேகம் தான். பாஜகவிற்கு வாக்களிக்கும் அளவிற்கு 'பக்தர்கள்' இங்கு அதிகம் இல்லை. நாம் தமிழர் கட்சிக்கு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் வரவேற்புள்ளது. இருப்பினும், இவ்விரு கட்சிகளும் தலா 4000 அல்லது 5000 ஓட்டுகள் வரை வாங்கலாம்.


கேள்வி:
இந்த தேர்தலால் ஏதேனும் குறிப்பான ஒரு மக்கள் பிரச்சனை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: 
என்னைப் பொறுத்தவரையில் இந்தத் தேர்தலால் எதுவும் நடந்துவிடப்போவதில்லை. ஒருவேளை இந்த ஆட்சி கலைந்தால் இன்னொரு தேர்தல் வர வாய்ப்புள்ளதையும் எதிர்பார்க்கிறோம். இந்தத் தேர்தலுக்குப் பின் அதிமுகவின் இரு அணிகள் தங்களுக்குள் ஒரு புரிதலை எட்டி அதனால் கட்சி மறுஉருவாக்கம் ஏற்பட்டால் தமிழக அரசியலில் மாற்றம் வரலாமே தவிர இந்தத் தேர்தலால் ஆர்.கே. நகரில் எந்தப் பிரச்சனையும் தீர்க்கப்படப்போவதில்லை.

                                                         **************************

$திட்டமிடல், கேள்விகள், எழுத்துநடை - PPR 
$பதில்களின் கருபொருள், தகவல் - TMN 

**இந்த உரையாடல் எந்த பொருளாதார, அரசியல் விருப்பு வெறுப்பின்றி, தொகுதியில் நடக்கும் சூழலை பிரதிபலிக்கும் என நானும், முருகனும் நம்புகிறோம்.  

***ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதையும் கமெண்ட்டில் தெரிவிக்கலாம். 

***இந்த பதிவு பற்றிய தங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.  நன்றி. 

- Paul Pown Raj (PPR) and Thirumurugan Nandagopal (TMN)